திங்கள், 1 அக்டோபர், 2018

கூகிள் கொண்டாடும் தமிழர்! October 1, 2018

Image

வெறும் 11 படுக்கைகளுடன் மருத்துவமனையை ஆரம்பித்து, பல லட்சம் பேருக்கு கண்ணொளி தந்து, இன்று உலகப்புகழ்பெற்ற மருத்துவமனையாக அசுரவளர்ச்சி பெற்றிருக்கும் அரவிந்த் கண்மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகிள் டூடுளில் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படத்தை வைத்து பெருமை படுத்தியிருக்கிறது கூகிள் நிறுவனம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடமலாபுரத்தில் அக்டோபர் 1ம் தேதி 1918ல் முத்துசாமி வேணுகோபால் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் டாக்டர்.வி என்கிற கோவிந்தப்பா வெங்கடசாமி. கோவிந்தப்பா வெங்கடசாமியின் குடும்பம் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்துவந்தது. கோவிந்தப்பா வெங்கடசாமியின் தந்தை அதிகம் படிக்காவிட்டாலும் ஏராளமான புத்தகங்களைப் படித்து அறிவை விசாலமாக்கிக் கொண்டவர். தான் சேகரித்த புத்தகங்களை வைத்து தன் வீட்டில் ஒரு சிறு நூலகத்தையே அமைத்திருந்தார். கோவிந்தப்பா வெங்கடசாமி நம்பிபுரம் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். 

பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் படித்த டாக்டர் வி, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1944ல் எம்.டி பயின்றார். மருத்துவப்படிப்பு முடித்த பின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார் டாக்டர்.வி. பர்மா காடுகளில் பணியாற்றிய போது விஷப்பூச்சிகள் கடித்ததில் சர்ம நோய் தாக்கியது. கூடவே முடக்குவாதமும் தாக்கியது. இதனால் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டார் டாக்டர்.வி. ஆனாலும், தன் படிப்பை கைவிடவில்லை. மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்றார். மீண்டும் தாக்கிய முடக்குவாதம், பேனாவைக் கூட பிடிக்க முடியாத நிலைக்கு டாக்டர்.வியின் கைவிரல்களைக் கடுமையாக பாதித்தது. ஓரளவு குணமடைந்து எழுந்த டாக்டர்.வியிடம், அவரது நண்பர், முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார்.

பின்னர் விடா முயற்சியோடு படித்து கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார் டாக்டர்.வி. சென்னை எழும்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கண் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். தானாகவே பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டு, திருகிக் கொண்டிருந்த விரல்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, கண்பார்வையை பாதிக்கும் கண்புறை அறுவை சிகிச்சை நுட்பங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டார். 

ஆனாலும், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கை விரல்களைக் காரணம் காட்டி, நோயாளிகளுக்கு, டாக்டர்.வி அறுவை சிகிச்சை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 1956-ல் மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேறு யாரும் முன்வராததால் இவர் மதுரைக்கு அனுப்பப்பட்டார்.

தான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார் டாக்டர்.வி. இவரது சேவையைப்பாராட்டி 1973ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி பெருமை படுத்தியது இந்திய அரசு.  1976ல் தனது 58வது வயதில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற டாக்டர். வி தனது ஆண்மீக குருவான அரவிந்தரின் பெயரில் மதுரையில் 11 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை ஒரு வாடகை வீட்டில் துவங்கினார்.

கிராமங்களுக்குச் சென்று கண் மருத்துவ முகாம் நடத்தும் திட்டத்தின் முன்னோடி டாக்டர்.வியே. பின்னர் அந்த திட்டத்தை தன் அரவிந்த் கண் மருத்துவமனையிலும் விரிவுபடுத்தினார். அரவிந்த் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தினந்தோரும் கண்மருத்துவ முகாம்களை நடத்துகிறது. கண்முகாம் நடத்தப்பட்டு பலருக்கு அங்கேயே கண்ணாடி வழங்கப்படுகிறது. அறுவைசிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு அறுவை சிகிச்சைகள் மற்றும் தங்கும் வசதிகளை இலவசமாக செய்கிறது. இதுவரை 2100க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தியிருக்கிறது இம்மருத்துவமனை.

இங்கு மருத்துவம் பெறும் வசதிகளை இலவச சிகிச்சை அல்லது கட்டண சிகிச்சையை நோயாளிகளே தேர்ந்தெடுக்கலாம். 1993ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல், அரவிந்த் கண்மருத்துவமனையின் கட்டண கொள்கையை ஆய்வு செய்து உருவாக்கிய “In service of sight” என்ற புத்தகத்தை அமெரிக்காவின் டாப் 20 பிசினஸ் ஸ்கூல்களுக்கு 1,50,000 பிரதிகளை வழங்கியிருக்கிறது.

11 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனை, தற்போது 4000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளாக விரிவடைந்து, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு கண் தொடர்பான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இதுவரை 6.8 மில்லியன் கண் அறுவை சிகிச்சைகள் நடைபெற்று 55 மில்லியன் பேர் கண்பார்வை திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண் மருத்துவ உலகில் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரவிந்த் மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர்.வி 2006ம் ஆண்டு ஜுலை 7ம் தேதி தனது 87வது வயதில் உயிரிழந்தார். டாக்டர்.கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது உருவப்படத்தை கூகிள் டூடுளாக அமைத்து அவரது பெருமையை உலகிற்கு பறைசாற்றியிருக்கிறது கூகிள்.