செவ்வாய், 2 அக்டோபர், 2018

மதுரையும் காந்தியும்! October 2, 2018

Image

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மதுரைக்கு எவ்வளவு முக்கிய பங்குள்ளதோ, அந்த அளவிற்கு தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையில் மதுரை தந்த மனமாற்றம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். கோட்-சூட் அடையாளத்தை மாற்றி, உலகமே வியந்த அரையாடை விரதத்தை முதன்முதலாய் மதுரையில் காந்தி தரித்த வரலாறு குறித்த ஒரு சிறப்புச் செய்தி.

1921ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மதுரை மேலமாசிவீதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார் மகாத்மா காந்தி. மதுரைக்கு வருவதற்காக காந்தி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது விவசாயிகள் அரைநிர்வாண உடை அணிந்திருப்பதை பார்த்தார். வறுமையில் வாடித் தவிக்கும் இந்த பாமர மக்களில் தானும் ஒருவன்தானே என்று நினைத்த காந்தி அன்று முதல் தானும் அரை உடையை உடுத்த முடிவு செய்தார்.  

செப்டம்பர் 22-ம் தேதி அவர் தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வந்த போது காந்தியைப் பார்த்து ஒரு கணம் வியப்படைந்தனர். அப்போது முதல் அந்த உடையில்தான் மரணிக்கும் தருவாய் வரை வாழ்ந்தார் காந்தி. காந்தி என்றவுடன் இன்று நம்முன் தோன்றுகின்ற அந்த மாபெரும் அடையாளத்தைப் பரிசளித்த பெருமை மதுரை மண்ணையே சாரும். 

அதே நாள் மாலை மதுரை-ராமநாதபுரம் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக 'அரையாடை'யுடன் மேடையில் பேசினார் காந்தி.  ராயலு அய்யர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு அருகிலுள்ள அந்த இடம், பின்னாளில் 
காந்திப் பொட்டல் என்ற பெயரால் பிரபலமடைந்தது. அந்த மருத்துவமனைக்கு முன்பாக, காந்தியடிகள் பேசிய  இடத்தில் அவருக்கு சிலை நிறுவப்பட்டது. 
 
சுதேசி இயக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு 1927ம் ஆண்டு மீண்டும் மதுரை வந்தார் காந்தி. மதுரை செல்லூர் பகுதியிலிருந்த சேதுபதி மன்னருக்குச் சொந்தமான மாளிகையில் தங்கினார். மீனாட்சி கல்லூரி வளாகத்தில் இருந்த அந்த வீட்டை  வரலாற்றுத் துறையின் சார்பாக அருங்காட்சியம் அமைக்க  பேராசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர். 

1934ம் ஆண்டு  அகில இந்திய ஹரிஜன யாத்திரையின்போது தக்கர் பாபா, மீராபென் ஆகியோருடன் மதுரைக்கு வந்த காந்தி கீழ்மதுரையிலுள்ள டாக்டர் என்.எம்.ஆர்.சுப்பராமன் மாளிகையில் தங்கினார். மகாத்மா காந்தி தங்கியிருந்த இல்லம் என்பதால், இன்றுவரை  பழமை மாறாமல் அந்த வீட்டை வீட்டின் உரிமையாளர்கள் பராமரித்து வருகின்றனர். 

வீட்டின் முன்பக்க வாசலில் நுழையும் போது மகாத்மா காந்தி இங்கு தங்கி இருந்ததற்கான சான்றாக கல்வெட்டு ஒன்று உள்ளது. 1946ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ம்  தேதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வழிபாடு செய்தார்.

பட்டியலின மக்களின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு காந்தி உறுதுணையாக இருந்ததற்கு சான்றாக மீனாட்சி அம்மன் கோவிலின் அம்மன் சன்னதி நுழைவாயிலின் வலதுபுறம் இரும்புத்தூண் ஒன்று உள்ளது.  'என் வாழ்க்கையே என் செய்தி' என்று உலகிற்கே உரக்கச் சொன்ன காந்திக்கும், இந்திய தேசத்திற்கும், ஏன் உலகத்திற்கும்கூட மதுரை மாபெரும் உன்னதமான வரலாற்றுச் செய்தியை தன்னகத்தே புதைத்துக் கொண்டு இப்போதும் தூங்காநகராய் சுழன்று கொண்டுதானிருக்கிறது.