credit : Ns7.tv
இந்தியாவில், கடந்த ஆண்டு காசு மாற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, 8ல் ஒரு இந்தியர் காற்று மாசு காரணமாக உயிரிழப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 12.4 லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின் மூலம், புகைப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களை விட காற்று மாசுபாடு பல நோய்களையும், வியாதிகளையும் ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது, மனிதர்களின் வாழ்நாளை 1.7 ஆண்டுகள் குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 77% மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கின்றனர். பல இந்திய மாநிலங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மாசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், பீகார் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளன.
இந்நிலையில், அதிகரித்துவரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பயன்பாடு காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.