நெல்லை அருகே இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரம் பகுதியை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே, முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை உயிரிழந்த துரைராஜ் என்பவரின் இறுதி ஊர்வலம், மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக சென்றபோது, இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள், சில வீடுகளின் மீது கல் எறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை அடித்து நொறுக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதனை அடுத்து இரு தரப்பினரையும் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற போது, இந்த கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போலீசாரை தடுத்ததால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
source ns7.tv