திங்கள், 8 ஏப்ரல், 2019

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! April 08, 2019


Image
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்ட தமிழக அரசு, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது. இத்திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள், திமுகவினர், பாமக எம்.பி. அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம், நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம், இறுதி தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு அறிவித்தது. 
அதன்படி, 8 வழிச்சாலை அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், மத்திய சுற்றுசூழல் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகே திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என தெரிவித்துள்ள நீதிபதிகள், இதுதொடர்பாக ஆலோசனை வழங்கிய நிறுவனத்தின் அறிக்கையை ரத்து செய்ததுடன், 8 வழிச்சாலை தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். விவசாயிகளிடம் கைப்பற்றப்பட்ட நிலங்களை 8 வாரத்தில் வருவாய்த்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
8 வழிச்சாலை திட்டத்திற்கெதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், இன்று காலையே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஒன்று கூடியிருந்தனர். எப்படியாவது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பியிருந்த அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

source ns7.tv