
பறக்கும் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜன் சென்றார். இந்த விமானத்தில், கனடாவில் படித்து வரும் லூயிஸ் சோஃபியா என்பவரும், தனது தந்தையுடன் பயணம் செய்தார். அப்போது, திடீரென சோஃபியா, தமிழிசையை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்த தமிழிசை, சோபியாவிடம் தன்னை பற்றியும் தனது கட்சி பற்றியும் தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தமிழிசை விமானநிலைய அதிகாரிகளிடமும், தாம் பயணம் செய்த விமான அலுவலகத்தில் சோஃபியா மீது புகார் அளித்துள்ளார். மேலும் தம்முடன் மோதல் போக்கை கையாண்ட சோஃபியா, ஏதாவது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அவரால் தமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜனுடன் தகராறில் ஈடுபட்ட சோபியாவை கைது செய்ய வலியுறுத்தி விமான நிலையத்தை முற்றுகையிட்டும், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சோபியாவை கைது செய்த புதுக்கோட்டை போலீசார், அவர் மீது ஐபிசி 290 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட சோபியா பின்னர் 3வது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சோபியா திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான சோபியாவின் தந்தை சாமி, தனது மகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சாமி புகார் அளித்தார்.