
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதியக்கோரி சோபியாவில் தந்தை ஏ.ஏ.சாமி தூத்துக்குடி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சோபியாவின் தந்தை டாக்டர் ஏ.ஏ. சாமி அளித்துள்ள புகார் கடிதத்தில்,தூத்துக்குடியில் தனது மனைவி, மகளுடன் விமானத்தில் இருந்து இறங்கும்போது மகள் ஷோபியா பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்ட சமயத்தில் தமிழிசை சவுந்திரராஜன் எதுவும் சொல்லாமல் பயணிகள் அமரும் கூடத்திற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் தனது கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டதன்பேரில் அவர்கள் தன் குடும்பத்தை சூழ்ந்துகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சாமி குற்றம்சாட்டியுள்ளார். தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மன வேதனையையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்திய பாஜக தலைவர் தமிழிசை உள்பட கட்சி தொண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாமி தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.