
இன்று குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து 40 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா, தடையை மீறி ரகசியமாக விற்கப்பட்டு வந்ததாகவும், அதற்காக தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதன்படி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை கடந்த ஜூன் மாதம் விசாரிக்கத் துவங்கினர். மறுபுறம் வருமான வரித்துறையினர் குட்கா விவகாரத்தில் மாதவராவ், சீனிவாசராவ் மற்றும் உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த கிடங்கு ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் குட்கா ஊழலில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய, மாதவராவ் எழுதிய டைரி ஒன்று சிக்கியது.
அந்த டைரியில் இருந்த விவரங்களின் அடிப்படையில் தற்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உட்பட 10க்கும் மேற்பட்ட உதவி, துணை காவல் ஆணையர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.