விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் எஸ்.பி.ஐ. வங்கிகளில் சுமார் 60 கோடி ரூபாய் கடன்பெற்ற 15 பேர், கடந்த 6 மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் தொழிற்சாலை நடத்தி வரும் வேல்முருகன் என்பவர், தமது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக கூறி, ஆவணங்களை பெற்றுள்ளார். பின்னர், அவர்களது பெயரில் எஸ்.பி.ஐ. வங்கியில் சுமார் 60 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். தமது உறவினர் செண்பகம் என்பவருடன் இணைந்து, வேல் முருகன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், வங்கியின் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு, தொழிலாளர்களுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, வேல்முருகனிடம் முறையிட்டுள்ளனர். அதன் பின்னர், வேல் முருகனின் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கடந்த 6 மாதத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், நாகமுத்து என்பவர் கடந்த 6 மாதமாக காணாமல் போய்விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், வேல்முருகன் நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, வேல்முருகன், செண்பகம் ஆகியோரை கைது செய்து, பெரியகுளம் சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, தற்போது சன்னாசி என்பவரையும் பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.