
சென்னையில் மு.க.அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, தன்னை கட்சியில் மீண்டும் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படாத சூழலில், தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னையில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.
மு.க. அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணியில், அழகிரியின் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பேரணியில் பலரும் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேரணி நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே தொடங்கிய பேரணி, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக அண்ணா நினைவிடத்தை அடைந்தது. அண்ணா சமாதியில், மரியாதை செலுத்திய மு.க. அழகிரி, அதன் அருகில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறினார். பேரணியில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அழகிரி, அனைவரையும் திமுகவில் இருந்து நீக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இந்த பேரணியை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பேரணி தொடங்கிய திருவல்லிக்கேணி முதல், கருணாநிதி நினைவிடம் வரை சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.