வெள்ளி, 5 அக்டோபர், 2018

2019-ல் இந்தியர்களின் சம்பளம் 10% அளவு அதிகரிக்க வாய்ப்பு! October 4, 2018

Image

2019-ல் இந்தியர்களின் சம்பளம் 10% அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வில்லீஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு சம்பள திட்டமிடல் தொடர்பான அறிக்கையை வில்லீஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 2018ம் ஆண்டை போலவே 2019ம் ஆண்டிலும் இந்தியர்களின் சம்பள உயர்வு விகிதம் 10%-ஆக இருக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியாவில் சம்பள உயர்வு விகிதம் சமமான அளவு நீடிக்கும் நிலையில், இதுதான் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக சம்பள உயர்வு விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. 8.3% ஊதிய உயர்வு விகிதம் இந்தோனேஷியாவில் இருக்கும் என்றும், 6.9% ஊதிய உயர்வு விகிதம் சீனாவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் மக்களின் சம்பள உயர்வு விகிதம் 4%-ஆக இருக்கும் என வில்லீஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வில்லீஸ் டவர்ஸ் வாட்சன் நிறுவன அதிகாரியான சாம்பவ் ராக்யான், டாலர் மதிப்பில் கணக்கிடுகையில் இந்தியாவில் உற்பத்தி மற்றும் பி.பி.ஒ நிறுவனங்களை நடத்திவரும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளுடன் ஒப்பிடுகையில் 10% வருமான உயர்வு என்பது பெரிய உயர்வெல்லாம் இல்லை என்றும், இந்திய நிறுவனங்கள் சந்தித்துவரும் பொருளாதார பிரச்னைகளில் 10% ஊதிய உயர்வு வழங்குவது சிக்கலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.