புதன், 3 அக்டோபர், 2018

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் October 3, 2018

Image

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோவதை தடுக்க, தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
 
மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையையும், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தையும் படிப்படியாகக் குறைத்து விடும் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை  நீட் தேர்வின் மூலம் சிதைத்துள்ள மத்திய அரசு, அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றிருக்கும் மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதை ஊக்குவித்திடவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே, மாணவர்களுக்குச் சம உரிமை வழங்கவும், சமூக நீதி தழைத்திடவும் ஒரே வழி என்றும் கூறியுள்ளார். 

எனவே, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.