தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அக்டோபர் 1ம் தேதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க காவிரிப் படுகை மற்றும் சுற்றுவட்டாரங்களான நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அப்பணியை தற்காலிகமாக மத்திய அரசு கைவிட்டது. இதற்கிடையே காவிரிப்படுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை “ஒருங்கிணைந்த பெட்ரோலிய மண்டலமாக” மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் என தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ((தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.)) இந்நிலையில் தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதன்படி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-க்கு ஓரிடமும், வேதந்தா நிறுவனத்துக்கு 2 இடங்களும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் நெருப்பை அள்ளி கொட்டுவது போல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.