சனி, 6 அக்டோபர், 2018

கீழடி விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக கார்த்திகேய சிவசேனாதிபதி முடிவு! October 5, 2018

Image

கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்யாத வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜல்லிக்கட்டு புகழ் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், கீழடி ஆய்வினை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே நடுவண் (மத்திய ) அரசு திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அஸ்ஸாமிற்கு பணி மாற்றம் செய்ததாகவும், அதுவே ஒருசர்ச்சையாய் மாறிப் பல ஆராய்ச்சியாளர்களும் துறை சார்ந்த சான்றோரும் வேண்டிய பிறகும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எந்த ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாரோ அவரே அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வுத் துறை விதி என்பதை சுட்டிக்காட்டியுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி, இப்படி இருக்க திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பொருட்களை வேறு ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும், அந்த ஆராய்ச்சியின் அறிக்கையைத் திரு.அமர்நாத்திடம் இருந்து பிடுங்கி மற்றொரு அதிகாரியிடம் நடுவண் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்து, ஆதிச்சநல்லூர், கீழடி வரை விடாது கரும் புள்ளியாய் நம்மை இன்றுவரை விரட்டுவதே தொடர் கதை ஆகிப் போயுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி, இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய நமது ஆட்சியாளர்களோ நடுவண் அரசாங்கத்தின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும், பல்லாயிரம் வருடப் பெருமை கொண்ட தமிழ் இனத்திற்கு இந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட திட்டமிடப்பட்ட அழிவிற்கு 2019-ஆம் ஆண்டிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவை நடுவண் அரசாங்கம் திரும்ப பெறாவிட்டால், உயர்நீதிமன்றத்தையோ உச்சநீதிமன்றத்தையோ அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.