ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் மாத்தூர் தொட்டிப் பாலம்! October 6, 2018

Image

லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் நிலையில், பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் ஆசியாவிலேயே அதிக உயரமும் நீளமும் கொண்ட மாத்தூர் தொட்டிப் பாலத்தை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியில் கணியன் பாறை மற்றும் கூட்டுவாயு பாறை என்ற இரு மலை பகுதிகளை இணைத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 1962-ம் ஆண்டு தொட்டிப் பாலம் கட்டப்பட்டது. 

104 அடி உயரமும், 1204 அடி நீளமும் கொண்ட ஆசியாவிலேயே அதிக உயரும் நீளமுமான பாலம் என்ற பெருமையையும் பெற்றதால், நாளடைவில் இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவே மாறியது. இந்தப் பாலத்தைப் பார்வையிட நாள்தோறும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். 

சமீப காலமாக பாலத்தின் கைப்பிடி சுவர் உடைந்தும், பாலத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு பராமரிப்பின்றி காணப்படுவதால் பாலத்தில் நடந்து செல்ல அச்சப்படுவதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

பார்ப்பதற்கு பாலம் பிரமிப்பாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றும் ஆனால் கழிப்பறை, குடிநீர், சாலை, பூங்கா போன்ற வசதிகளை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப் பகுதியைச் சேர்ந்த ஜான்சலின் சேவியர் என்பவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அருவிக்கரை ஊராட்சிக்கு இந்தப் பாலம் மூலம் சுமார் 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும், ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், அதிகாரிகள் இந்தப் பாலத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் ஜான் கிறிஸ்டோபர்.

பாலத்தை புனரமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.