விழுப்புரம் அருகே, அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வழங்கிய விலையில்லா சைக்கிளில், கர்நாடக அரசின் முத்திரை பதிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் சைக்களின் முன்புறத்தில், கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டு, மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள், தரமற்ற முறையில் இருப்பதை கண்டறிந்து, அம்மாநில கல்வித்துறை செயலாளரை, 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் குமாரசாமி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிராகரிக்கப்பட்ட சைக்கிள்களை வாங்கி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.