சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த எவருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு விசாரணையில், அனுமதியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்பூஷண் தலைமையிலான அமர்வு, மெரினாவில் போராட்டம் நடத்த எவருக்கும் அனுமதி அளிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.