credit ns7.tv
நாசாவில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான கல்வித்தகுதிகள் எதுவும் இல்லாமல் இதற்கு ஒரு வித்தியாசமான தகுதி மட்டுமே தேவை என்பதால் நாசாவின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக செயல்பட்டு வருவது அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனம். இங்கு பணிபுவதை உலகின் பல அறிவியலாலர்களும், ஆராய்ச்சியாளர்களும் லட்சியமாக கொண்டுள்ளனர். இதனிடையே அசாதாரண சோதனை ஒன்றிற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எடைகுறைவை சந்திக்கின்றனர். இது எலும்பு, எலும்பு மஜ்ஜை சிதைவு உட்பட மனித உடலில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் தொடர்பாக AGBRESA (Artificial Gravity Bed Rest - European Space Agency) என்ற பெயரிலான செயற்கை புவிஈர்ப்பு படுக்கை சோதனை ஒன்றை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்த உள்ளது.
பாதுகாப்பான விண்வெளி மனித பயணத்திற்கான சிறப்பான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறியும் விதமாக மனித ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு மாத காலத்திற்கு படுக்கை ஓய்வில் (Bed Rest) இருக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு 19,000 அமெரிக்கா டாலர்கள் கொடுக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்ச ரூபாயாகும்.
இந்த சோதனைக்காக 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் இரண்டு மாத காலத்திற்கு இரவு, பகல் என 6 டிகிரி சாய்வு கோணத்தில் உள்ள படுக்கையில் இருக்க வேண்டும். இதன்படி சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்களது பாதம், தலைப்பகுதியை விட சற்று கூடுதல் உயரத்தில் இருக்கும். மேலும் ஒரு சாய்த்து படுத்தவாறு இருக்க வேண்டும்.
இதன் மூலம் ரத்த ஓட்டம் கடுமையாக குறைக்கப்படும், இது விண்வெளியில் பயணமாகும் வீரர்களின் நிலைக்கு ஒப்பானதாகும். மேலும் செயற்கையாக புவி ஈர்ப்பு விசையை உருவாக்கி இந்த சோதனை நடத்தப்படும்.
இந்த இரண்டு மாத படுக்கை சோதனையானது உளவியல் மற்றும் உடலியல் இரண்டுக்குமான கடும் சோதனையாகும். இது உடல்குறைவின் விளைவுகளை கண்டறிய நடத்தப்படுகிறது. இச்சோதனை ஜெர்மனியில் உள்ள ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக இந்த சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி அறிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அவர்கள் நல்ல உடல்திறனுடன் 24 மற்றும் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கான உணவு படுக்கையிலேயே அளிக்கப்படும்.
இந்த சோதனைக்கு உட்படுபவர்கள் பழைய நிலைக்கு திரும்ப கூடுதலாக 29 நாட்கள் அந்த மையத்தில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.