source ns7.tv
வயநாட்டை சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர், IAS தேர்வில் வெற்றி பெற்று, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்துவரும் சுரேஷ்- கமலா தம்பதியினரின் மகள் ஸ்ரீதன்யா. 22 வயதாகும் இவர், பழங்குடி இனத்தை சேர்ந்தவர். நன்றாக கற்கும் ஆற்றல் கொண்ட இவர், பல இக்கட்டான சூழ்நிலைகளையும் கடந்து, UPSC தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 5ம் தேதி வெளியான தேர்வு முடிவுகளின் மூலம், அகில இந்திய அளவில் 410வது இடத்தை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பலர் இப்பெண்ணுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
வயநாடு பகுதியில் இருக்கும் பழங்குடி இன மக்களில் ஒருவர் கூட IAS அதிகாரியாகவில்லை எனவும் தான் IAS அதிகாரியான பின்னர் பலருக்கு முன் உதாரணமாக இருக்கமுடியும் என ஸ்ரீதன்யா தெரிவித்தார். சாதனை செய்யவேண்டும் என நினைப்பவர்கள், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் கடுமையாக முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள் என்பதற்கு மற்றொரு சான்றாக ஸ்ரீதன்யா திகழ்கிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.