பாஜக மற்றும் காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் இருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள்.
தீவிரவாதம் விஷயத்தில் சகிப்பின்மைக் கொள்கை கடைபிடிக்கப்படும். என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறியுள்ளது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என பாஜக உறுதியளித்துள்ள நிலையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழங்குகிறது
புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு உரிமம் பெற வேண்டியது இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது
மாநில அரசுடன் முறையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தப்படும் என்று பாஜகவும், தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி மறு ஆய்வு செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும் என்று காங்கிரசும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன.
வட்டியில்லாமல் ஒரு லட்சம் வரை விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடன் வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு பாஜக வாக்குறுதி அளிக்கிறது. அதே நேரம் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் என காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கிறது.
60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று பாஜகவும், தேசிய நெடுஞ்சாலைகள் நீளமாக்கப்படும், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, தரம் பராமரிப்பு, பொறுப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்- காங்கிரசும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளன.
நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என பாஜகவும் குடிமக்கள் ஒவ்வொருவரும் இலவச மருத்துவ வசதியை அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் பெறுவது உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.
கிராமப்புற வளர்ச்சிக்காக 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமபுறங்களில் கட்டுமானத்தை மேம்படுத்த நடவடிக்கை. சாலைகள், பாலங்கள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடங்களின் தரம் மேம்படுத்தப்படும் என கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிடுகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்ற கொள்கையில் தொடர்ந்து உறுதியாக செயல்படுவோம் என பாஜக கூறியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 370-ல் எந்த மாற்றமும் செய்யப்படாது என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது,
source ns7.tv