புதன், 3 ஏப்ரல், 2019

Prank Show-க்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் அதிரடி! April 03, 2019

source ns7.tv
Image
Prank show எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. 
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "Tik Tok" எனும் செயலியை பல இளைஞர்கள் தவறான பாதையில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். எனவே இளைஞர்களின் நலன் கருதி "TiK ToK" செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் "Tik Tok" செயலி அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் இதைகேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொண்டு வரக்கூடாது? என கேள்வி எழுப்பினர். "Tik Tok" செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனிடையே prank show என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதற்கும் தடைவிதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து  prank show எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.