கேரளாவின் மூணாறு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் குடிநீர் இல்லாததால், ஒரு கிலோ மீட்டர் சென்று தாகத்தை தணிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
மூணாறிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கன்னிமலை எஸ்டேட் பகுதி. இங்கு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக இயங்கி வருகிறது அரசு ஆரம்பப் பள்ளி. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளி, மண்சரிவிலிருந்து தப்பியபோதும், குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பவில்லை. மண்ணோடு குடிநீர் குழாய் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தினமும் நடந்து சென்று, ஆசிரியர்களே குடிநீரை சேகரித்து வருகின்றனர்.
பள்ளிக்கு வரும் சாலைகள் சின்னாபின்னமாகி காணப்படுவதால், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இதனால் தற்போது குறைந்தளவு மாணவர்களே பள்ளிக்கு வருகின்றனர்.
பள்ளியின் கழிவறைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆசிரியர்களும், மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மூணாறு பஞ்சாயத்து அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரத்தில் மூணாறு பகுதியில் சின்னபின்னமாகியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.