ராசிபுரம் அருகே 2 ஆண்டுகளாக பணிக்கு வராமல் சம்பளம் வாங்கிய உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் போதமலை அருகே கீழுர் ஊராட்சி உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் உள்ளதால் போதிய சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமையாசிரியர், உதவி ஆசிரியை, சமையலர், துப்புரவு பணியாளர் என 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் பணிபுரியும் ஆசிரியை பார்வதி கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு வந்ததே இல்லை எனவும் ஆனால், மாதந்தோறும் சம்பளம் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிக்கு வராத ஆசிரியை மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.