
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, தமிழக டிஜிபி ராஜேந்திரன் வீடு உட்பட நாடு முழுவதும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்க துணை போனதற்காக, 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 17 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. குட்கா பொருட்களை விற்பதற்காக லஞ்சம் கொடுத்த மாதவராவ் என்பவரின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை அடிப்படையாக வைத்து டெல்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய சிபிஐ சோதனை, நாடு முழுவதும் 35 இடங்களில் 13 மணி நேரமாக மேலாக நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, சென்னை நொளம்பூரில் உள்ள சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜின் வீடு உள்பட, தமிழகம் முழுவதும் 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், 12 மணி நேரமாக நீடித்த சிபிஐ சோதனை, இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த சோதனை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
குட்கா ஊழல் நடைபெற்ற போது சென்னையில் பணியாற்றிய ஆய்வாளர் சம்பத் தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவரது வீட்டிலும் மாலை 6 மணியளவில் சோதனை முடிவடைந்த நிலையில், ஆய்வாளர் சம்பத் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.