அமேசான் காட்டில் 22 ஆண்டுகளாக தனியாக வசித்துவரும் ஆதிவாசியின் வீடியோவை பிரேசில் அரசு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காட்டில் மனிதன் தனியாக இருக்கிறான் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து, அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ வெளியானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆத்தியுள்ளது. சட்டை இல்லாமல், இடுப்பில் மட்டும் ஒரு துணியை கட்டிக்கொண்டு மரம் வெட்டுவதுபோல் அமைந்துள்ளது அந்த வீடியோ காட்சி.
1980களில் அமேசான் காட்டில் இருந்த ஆதிவாசி மனிதர்கள் மீது தொடுத்த தாக்குதலை அடுத்து, அங்கிருந்த மக்கள் பலர் வேறு இடத்திற்கு நகர்ந்தனர். ஆனால், 6 பேர் சேர்ந்த குழு மட்டும் அங்கேயே வசித்து வந்தது. அதன் பின்னர், 1995 ல் அப்பகுதி விவசாயிகள் அந்த ஆதிவாசிகள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலை அடுத்து ஒரு ஆதிவாசி மட்டும் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், அவரை பல நாட்கள் காத்திருந்து படம் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும், தற்பொழுது வீடியோவில் சிக்கியுள்ள ஆதிவாசிதான் அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசி இனத்தவர்களில் கடைசி மனிதன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.