
கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஒருவர் கன்னியாஸ்திரியை விபச்சாரி என விமர்சனம் செய்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் குருவிளங்காடு பகுதியில் உள்ள செயிண்ட் ஃபிரான்ஸிஸ் மிஷன் பள்ளியில் தங்கி பணியாற்றி வந்த 43 வயது கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியாரான (Bishop) ஃபிரான்கோ முலக்கல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முக்கியமான விஷயமாக பேசவேண்டும் என நேரில் வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் 2016ஆம் ஆண்டு வரை 13 முறை வலுக்கட்டாயமாக அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாபில் உள்ள ஜலந்தருக்கு சென்ற கேரள போலீசார் பாதிரியார் ஃபிரான்கோ முலக்கலிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவருடன் பணிபுரிந்து வரும் 5 கன்னியாஸ்திரிகளும், கிறிஸ்துவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றம் அருகே கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதிரியாருக்கு எதிராக பாலியல் வன்புணர்வு புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு நீதி வேண்டும் என்றும். பாதிரியார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பாதிரியாருக்கு அரசியல் ரீதியாக கேரளாவிலும், பஞ்சாபிலும் செல்வாக்கும், பணபலமும் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர் தப்பி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏவான பி.சி.ஜார்ஜ் இந்த விவகாரம் தொடர்பாக பேசும்போது, “அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. 12 முறை சந்தோஷம் அனுபவித்து விட்டு 13வது முறையாக பாலியல் வன்கொடுமை என்று எதற்காக கூற வேண்டும்? முதல் முறையாக நடந்த போதே எதற்காக அவர் புகார் அளிக்கவில்லை” என்று பாதிரியாருக்கு ஆதரவான வகையில் பேசியுள்ளார். எம்.எல்.ஏவின் இப்பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தேசிய ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா எம்.எல்.ஏ ஜார்ஜின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, கேரள டிஜிபியிடன் இது போன்று பேசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.