
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இந்தியாவில் சமீப நாட்களாக பெட்ரோல் - டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக , விடுதலைச்ச சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுபோல், ஐஎன்டியூசி, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. ஆகிய தொழிலாளர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்திற்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இன்று முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில் உள்ள அனைத்து பஸ் டெப்போக்கள் முன்பும், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம், தமிழகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள், இன்று வழக்கம் போலவே செயல்படும் என அறிவித்துள்ளது.