
கேரளாவில் ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதான அதே கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் தேசிய தலைமைக்கு புகார் மனு அனுப்பிய சம்பவம் கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் வகையிலாக மாநில மகளிர் ஆணையத் தலைவி கருத்து கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோர்னூர் தொகுதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான பி.கே.சசி, மனார்காட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தொடர்ந்து தொலைபேசியில் பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும் அக்கட்சியின் இளைஞர் அணியான DYFI-ஐ சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் கட்சியின் மாநில தலைவரான கொடியேரி பாலக்கிருஷ்ணனுக்கும், பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்துக்கும், பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் கடந்த மாத இறுதியில் இ-மெயில் மூலம் புகார் அளித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை தேசிய தலைமை அமைத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி எம்.சி.ஜோசப்பீன் கூறும்போது, “நாமெல்லாம் மனிதர்கள், தவறுகள் நடக்கக்தான் செய்யும், கட்சிக்குள் இருப்பவர்களும் இதே போன்ற தவறை செய்திருப்பார்கள்” என்றார்.
எனினும். இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும், தாங்களாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றாலும் இப்புகார் குறித்த சில தகவல்கள் தேவைப்படுகின்றன, இதனை பாதிக்கப்பட்ட பெண்ணோ, ஊடகங்களோ கூட வெளியிடவில்லை, பிறகு எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார் ஜோசப்பீன். மேலும் கட்சி தொடங்கியதிலிருந்தே இது போன்ற விவகாரங்களை அக்கட்சி கையாண்டிருக்கும், இது ஒன்றும் புதிதல்ல இந்த விவகாரத்தில் அவர்களாகவே முடிவெடுப்பார்கள் என்று கூறி முடித்தார்.
இருப்பினும், தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது, இது குறித்து விசாரிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கேரள போலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.