கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்து அதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழர்கள் குறித்து சிறப்பு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்குத் தனி இடம் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல வரலாற்றின் பல இடங்களில் தமிழகம் போராட்ட பூமியாகவே இருந்திருக்கிறது. அந்தப் போராட்டங்களை முன்னெடுக்கவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், கோரிக்கையை வென்றெடுக்கவும் பல்வேறு விதமான உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறது தமிழகம். அந்த உத்திகள் பலருக்கும் வியப்பைக் கொடுக்கலாம். அதிர்ச்சியைக் கொடுக்கலாம். அச்சத்தைக் கொடுக்கலாம்.
ஆனால் அந்த உத்திகள் மிகப்பெரிய கவனஈர்ப்பை ஏற்படுத்தியவை. தாக்கத்தை ஏற்படுத்தியவை. சாதனைகளையும் வேதனைகளையும் சேர்ந்தே சந்தித்தவை. குறிப்பாக, உண்ணாவிரதம் இருந்து உயிர் துறத்தலையும், தீக்குளிப்பையும், விஷமருந்தி உயிர் கொடுத்தலையும் சொல்லவேண்டும்.
தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாக செய்த சங்கரலிங்கனார் தொடங்கி பல தியாகிகளை தமிழகம் பார்த்திருக்கிறது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி இரண்டரை மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் சங்கரலிங்கனார். அவரது தியாகத்தின் காரணமாக தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது.
தமிழகத்தின் போராட்ட வரலாற்றில் முக்கியமானது இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டம். சுதந்திரத்திற்கு முன்னர் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த நடராசன், தாளமுத்து தொடங்கிப் பலர் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போரில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போரில் கீழப்பழுவூர் சின்னசாமி தொடங்கி மயிலாப்பூர் சாரங்கபாணி வரை பலர் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தித் திணிப்பு தமிழகத்தில் தடுக்கப்பட்டது.
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார், ராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக் கோரி தீக்குளித்த செங்கொடி என பல தியாகிகளை தமிழகம் கண்டிருக்கிறது.
பள்ளி இறுதியாண்டு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் அனிதா. நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை தமிழக மக்களிடம் அந்த மரணம் ஏற்படுத்தியது. ஆனாலும் நீட் விவகாரம் காரணமாக பல மாணவர்கள் வாய்ப்புகளை இழந்து வருவது தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.