
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, ஊடகங்களில் தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது, புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
“தலித்”
இது வெறும் சொல் அல்ல. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த அடையாளம். தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக சொல்லப்பட்டு வந்த 'தலித்' என்ற வார்த்தையை, ஊடகங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது மத்திய அரசு. மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர்களில் இரண்டு பேரும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எனினும், ஒரு தரப்பினரிடையே ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. 'தலித்' என்பது அங்கீகரிக்கப்பட்ட சொல் அல்ல என்றும், 'தலித்' என்பதற்கு பதிலாக, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், 'தலித்' என்ற வார்த்தைக்கான அர்த்தம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
'தலித்' என்ற வார்த்தை, சமஸ்கிருத மொழியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வார்த்தைக்கு, பிரித்தல், பிளவுப்படுதல், உடைந்தது என பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. 'தலித்' என்பது ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் வார்த்தை. இந்த நிலையில், 'தலித்' என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என ஊடகங்களுக்கு தடை விதித்திருப்பதை ஏற்க முடியாது, என்கிறார் 'தலித் முரசு' இதழின் ஆசிரியர் புனித பாண்டியன்.
அந்த காலத்திலேயே, அனைவரும் 'தலித்' என்ற வார்த்தையை பயன்படுத்திய போது, காந்தி மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை 'ஹரிஜன்' என்று அழைத்தார். 'ஹரிஜன்' என்றால். 'கடவுளின் பிள்ளை' என்று அர்த்தம். இதற்கு அம்பேத்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 'தலித்' என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தாலும், தமிழகத்திலும் இந்த வார்த்தையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 'தலித்' என்ற வார்த்தையை மாற்றுவதால் மட்டுமே, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில், மாற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறி தான்....