
சிறைத்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து புல்லட் நாகராஜை கைது செய்ய தனிப்படை போலீசார் பெரியகுளம் விரைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் புல்லட் நாகராஜ் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ பதிவு மூலம் மதுரை சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்ளிட்ட அதிகாரிகளை கொலை செய்து விடுவோம் என பேசிய அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.
இதையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலை அலுவலர் ஜெயராமன், மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திடம், புகார் மனு அளித்தார். அந்த மனுவில் புல்லட் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் புல்லட் நாகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேனி விரைந்துள்ளனர்