
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து நாளை ( செப்டம்பர் 10) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதில் பங்கேற்க திமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளும், லாரி, கார், ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர் சங்கத்தினர் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பார்தா சட்டர்ஜி அறிவித்துள்ளார்.
இது போன்ற போராட்ட வடிவங்களை கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி எதிர்ப்பதாகவும், இது போன்ற போராட்டத்திற்காக ஒரு வேளை நாளை பாழாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள சட்டர்ஜி, எனினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனையில் தங்கள் கட்சி கலந்துகொண்டு பேரணி மற்றும் கண்டனத்தை பதிவு செய்யும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் போராட்டங்களை எடுத்துச் செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஏதும் வித்தை காட்ட விரும்பவில்லை என்றும் கூறிய சட்டர்ஜி, நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் நலன்களை காக்கும் பணியில் எப்போதும் ஈடுபட்டிருப்பதாக கூறிய அவர், அதற்காக பணி நாளை வீணாக்க விரும்பவில்லை என்று கூறினார்.