புதன், 3 அக்டோபர், 2018

​டெல்லிக்குள் நுழைய நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விவசாயிகளுக்கு அனுமதி! October 3, 2018

Image

தலைநகர் டெல்லிக்குள் நுழைய நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தி தினத்தில் அதிர்ந்திருக்கிறது தலை நகர் டெல்லி... இந்தியாவின் முதுகெலும்பு எனப்படும் விவசாயிகள் நடத்திய போராட்டம் தான் டெல்லியில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில், தங்களின் நிலையை மீண்டும் ஒருமுறை இந்த சந்ததியினருக்கு எடுத்துரைத்துள்ளனர் விவசாயிகள். 21 நாட்கள் நடந்த போராட்டத்திற்கான நியாயத்தை கேட்க டெல்லி நோக்கி புறப்பட்டனர் விவசாயிகள். 

உத்தரபிரதேசம் , ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி ஒட்டுமொத்தமாக பேரணி சென்றனர். விவசாயிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்லும் என்பதை உணர்ந்திருந்த டெல்லி காவல்துறையினர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் தடை உத்தரவை மீறி டெல்லிக்குள் நுழைவது என முடிவெடுத்தனர் விவசாயிகள். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி- உத்தரபிரதேச எல்லையில் தடுப்பு வேலி அமைத்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முயன்றனர் காவல்துறையினர். இதனால் காவல்துறை மற்றும் விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் குண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைத்தனர். 

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர். மேலும் இருமாநில எல்லையில் கடும் பதற்றம் நிலவியது.  டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் தேர்ந்தெடுத்த அரசிடம்தானே கேட்க முடியும். அதை விடுத்து பாகிஸ்தானிடமோ வங்கதேசத்திடமோ நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க  முடியுமா என்ற விவசாயிகளின் புலம்பல் அவர்களின் வலியின் வெளிப்பாடாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது

இதனிடையே காவல்துறையின் செயல்பாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச அகிம்சை தினத்தில் டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு கொடூரமாக தடியடி நடத்தியுள்ளது என்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். இவை எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமா இல்லையா என்பதை பரிசீலித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.