தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 136 பெண்கள் உட்பட ஆயிரத்து 821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள 13 தொகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் நடிகர் நாகர்ஜுனா, அவரது மனைவி நடிகை அமலா ஆகியோர் , தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இதேபோல் முன்னாள் அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸில் தனது வாக்கை பதிவு செய்தார். மாலை 5 மணி நிலவரப்படி, தெலங்கானாவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கும், இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கைப்பற்ற பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென மரணம் அடைந்ததால், இதர 199 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே Jhalrapatan வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். ராஜஸ்தானில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.