சனி, 8 டிசம்பர், 2018

ராஜஸ்தானை கைப்பற்றுகிறது காங்கிரஸ்;


மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 126 இடங்கள் கிடைக்கும், என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 89 இடங்கள் கிடைக்கும், எனவும் அந்த கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதேபோல், மத்தியப் பிரதேசத்தில், பாஜக 102 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி 104 முதல் 122 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 112 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, NEWSX தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 46 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும்,   காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுபோல், பாஜக 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் - 40 இடங்களிலும் வெற்றி பெறும் என NEWSX கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பாஜக  35 முதல் 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 42 முதல் 50 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் சி வோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 85 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாஜக ஆட்சி நடைபெறும் அந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 105 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், அக்கட்சிக்கு 66 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தெலங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக  7 இடங்களில் வெற்றி பெறும், என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: NS7.tv