ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்ததால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வழக்கறிஞர் வைரக்கண்ணன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையில், புகாரளித்தும் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என திமுக வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நீதிபதி சத்தியநாராயணா அமர்வு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், பணப்பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு, மார்ச் மாதமே ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்ததும் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை நடக்கும் போதே வழக்கு எவ்வாறு ரத்து செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். அப்போது, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவின் பேரில் FIR ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து இன்று மாலைக்குள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.