புதன், 5 டிசம்பர், 2018

பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடுவதற்கான புதிய விதிமுறைகள்! December 05, 2018

Image

பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 
பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிக்கும் விவகாரத்தில் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை, மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார். அதில், வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும் என்றும், சாதாரண மழை பெய்யும் சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே, விடுமுறை விடலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும் என்றும், ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பாடத்திட்டம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.