சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி-யாக இருந்த பொன்.மாணிக்க வேல் கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நாளன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக மேலும் ஓராண்டு பொன்.மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கும் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.