கோயில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை கொலை நகரமாக மாறி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள் மல்லிகைப் பூவிற்குப் பெயர் பெற்ற மதுரையில் ரத்த வாடை வீச வைத்துள்ளது. இளைஞர்களே பெரும்பாலும் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என்பது வேதனையை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 1 மாதத்தில் மட்டும் 14 கொலை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. கீரத்துறை, ஜெய்ஹிந்த்புரம், செல்லூர் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலிலேயே கொலைகள் அரங்கேறியுள்ளன. பெரும்பாலும் 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களே இந்தக் கொலை சம்பவங்களில் கும்பலாக ஈடுபட்டுள்ளனர் என்பது ஒட்டுமொத்த பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தின் தூங்கா நகரம் என்று கொண்டாடப்படும் அளவிற்கு 24 மணி நேரமும் மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் மதுரையில் தற்போது அரிவாள்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. வேலையின்மையாலும், வறுமையாலும் விரக்தியடைந்த இளைஞர்களே இவ்வாறு கொலைக் களத்தில் புகுந்து விடுகிறார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடாமல் இருக்க பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதுரை காவல்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் ஆவேசத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவானது அவர்கள் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது எனவும், பெற்றோர்கள் இளைஞர்கள் மீது அக்கறைகொண்டு ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார் காவல் துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம்.
வீட்டில் இருக்கும் நேரம் தவிர வெளியிலும் இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் நடவடிக்கைகள் என்ன, யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து நல்வழிக்குக் கொண்டு வருவதில் பெற்றோர்களின் பங்கும் முக்கியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.