500 ரூபாய் சம்பாதிக்கவே பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே 7 வயது சிறுவன் ஒருவன் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறான்.
பெரும்பாலான குழந்தைகள் 7 வயதில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதே பொம்மைகளை வைத்தே ஆண்டுக்கு 150 கோடி சம்பாதிருக்கும் 7 வயது சிறுவனை பற்றி உங்களுக்கு தெரியுமா?. ஆம், அமெரிக்காவை சேர்ந்த ரேயான் என்ற சிறுவன்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரன். 7 வயதே ஆகும் இவன்தான் உலகிலேயே அதிக அளவில் யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுகிறான்.
உலகில் 2017-2018ஆம் ஆண்டில் யூடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் என ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் 155 கோடி ரூபாய் வருமானத்துடன் முதல் இடம் பிடித்திருக்கிறான் ரேயான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரேயான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பாகவும், அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பிறகே வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தான்.
பொம்மைகள் மீதுள்ள ரேயானின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அவனது தந்தை, கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் (Ryan Toys Review) என்ற யூடியூப் சேனலை உருவாக்கினார். ஆரம்பத்தில், யுடியூபில் ரேயானின் வீடியோக்கள் பிரபலமடையவில்லை. ஆனாலும் விடாமுயற்சியாக தினந்தோறும் ரேயானும், அவனது தந்தையும் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தனர்.
உழைப்பு என்றும் வீணாகாது என்ற பழமொழிக்கேற்ப, ஜூலை 2015ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட ரேயானின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அதன் பின்னர் பிரபலமாக தொடங்கிய ரேயான், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் விதவிதமான பொம்மைகளை செய்முறையோடு செய்து காட்ட ஆரம்பித்தான். தங்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்க வேண்டும் என்றால் ரேயானின் வீடியோவை தேடிப்பிடித்து பார்க்க தொடங்கினர் பெற்றோர்கள்.
தற்போது வரை இவனது யூ டியூப் சேனலை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ரேயன் அப்லோட் செய்த வீடியோக்கள் 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
ரேயான் ரிவ்யூ வழங்கும் விளையாட்டு பொருட்கள் எல்லாம் சந்தையில் பெரிய அளவில் ஹிட் அடிக்க தொடங்கியது. இதனால் இவன் ஒரு பொருளுக்கு நல்ல ரிவ்யூ கொடுத்துவிட்டால், அது மார்க்கெட்டில் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதாக போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
குழந்தைகளின் சூப்பர் ஸ்டாரனா ரேயானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வால்மார்ட் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தது. அதன்படி தனது வால்மார்ட் ஷோரூமில், ரேயான் வேர்ல்ட் என்று பெயரில் தனி பிரிவையே இவனுக்காக உருவாக்கி ரேயானை கவுரவித்தது.
தனக்கு பிடித்த விஷயத்தையே வேலையாக வைத்துக்கொண்டால் அந்த வேலை வாழ்வில் நம்மை மிக உயரமான இடத்துக்கு அழைத்துச்செல்லும் என்பதற்கு ரேயானே சிறந்த உதாரணம்.