வியாழன், 6 டிசம்பர், 2018

விதிகளை மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! December 05, 2018

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் முன்னிலையில் ஆஜரான டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர் வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என மாநகராட்சி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.