வெள்ளி, 7 டிசம்பர், 2018

மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் December 07, 2018

Image

source: ns7.tv
கர்நாடகாவின் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் முழு ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை கூடியது. இக்கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், மாநில அரசின் நலன் புறக்கணிக்கப்படுவதாகக் குறை கூறினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் திமுக கூறுவதாக தெரிவித்தார். பின்னர் தீர்மானத்தின் மீது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் உயிர் பிரச்னையான காவிரி பிரச்னையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை என்று கூறிய அவர், முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து உறுப்பினர்களின் உரைக்கு பின்னர், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் உரையாற்றினார். காவிரியின் ஒப்பந்த சரத்துகளை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளதாகக் கூறினார். 
பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்ததை அடுத்து, மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அரசியல் பாகுபாடின்றி திமுக ஆதரித்ததாகக் கூறினார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துடன் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் இணைக்கப்பட்டுள்ளது.