மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவு குறித்த அறிவிப்பை, தேசிய தேர்வு முகமை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவிரினருக்கு வயது உச்ச வரம்பு 25 வயது என்றும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயதாகவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்தது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் எழுத சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
source;ns7.tv