சனி, 8 டிசம்பர், 2018

பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளதா? December 08, 2018

Image

பட்டியல் இன மக்கள் அதிகாரம் பெறுதல் குறித்தான உரையாடல் அண்மைக்காலமாக அரசியலின் மையப்பொருளான விவாதத்தை உருவாக்கியுள்ளது. வைகோ - திருமாவளவன் இடையிலான உரையாடல், ஒருபுள்ளியைத் தொட்டுள்ளது என்றால், அதனை இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விவாதத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளார். 

பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளதா என்ற விவாதமே கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலை மையம் கொண்டு சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் அதிகாரம் அளித்துள்ளதை விளக்கும்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தங்கள் வீட்டில் பணிபுரியும் பட்டியல் இனத்தவர்களை சமமாக நடத்துகிறோம் என்று விவாதத்திற்கு வித்திட்டார். இதனால், வெகுண்டெழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ஆதங்கத்தைத் தெரிவிக்க, விவாதம் அங்கிருந்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது திரும்பியது. திருமாவளவன் தூண்டுதல் பேரில் தான் வன்னியரசு பதிவிட்டதாக வைகோ மீண்டும் சாட்டையை சுழற்ற, அதற்கான அவசியம் தமக்கு இல்லை. எந்த கருத்தையும் தான் தனி ஆளாக எதிர்கொள்வேன் என்றும் பதிலடி கொடுத்தார் திருமா. இந்த உரையாடல் அத்துடன் நிற்காமல், அது, திராவிட கட்சிகளுக்கு எதிராக  திருமாவளவனை நிறுத்தும் மறைமுக தாக்குதலாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

வைகோ - திருமாவளவன் திமுக தலைமையில் ஒரே அணியில் இருக்கும் சூழலில், இந்த உரையாடல் அவர்கள் அணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய திருமாவளவன் தனித்து விடப்பட்டுள்ள சூழலே தற்போதைய களநிலவரம்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தவிர்த்த மற்ற அணியில் கொள்கை ரீதியாக திருமாவளவன் சேர முடியாத சூழலில், அவர் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கேள்வி. ஆனால், திருமாவளவன் மீள் பரிசோதனை செய்யும் வகையில், பல காலமாக பேசப்பட்டு வந்த ஒரு கருத்தை தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் வெளிப்படுத்தியுள்ளார். 

அது, திராவிடக் கட்சிகளை புறக்கணியுங்கள் - பட்டியல் இன கட்சிகளே அணி திரளுங்கள் என்பது தான்....பட்டியல் இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்ததா எனத் தொடங்கி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ரஞ்சித், குறைந்தபட்சம் ஆணவப்படுகொலை விஷயத்தில், ஒரு கண்டனத்தையாவது திமுக - அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் தெரிவித்ததா என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், தனித்தொகுதியில், திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களை ஒதுக்கிவிட்டு, பட்டியல் இனக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வாக்களியுங்கள் என்று முழங்கியுள்ளார் ரஞ்சித். இதுவரை திராவிடக் கட்சிகளுக்காக உழைத்தது போதும் என்றும், திருமாவளவன், கிருஷ்ணசாமி, செ.கு.தமிழரசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பட்டியல் இனத்தலைவர்கள் ஓரணியில் திரண்டு, சுயேட்சையாக நின்றால், அவர்களுக்காக தேர்தலில் தீவிரமாக பணியாற்றி நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம் என்றும், அவர்களும் பட்டியல் இன மக்களுக்காக பேசவில்லை என்றால் உரிமையோடு அவர்களிடம் கேட்கலாம் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

இயக்குநர். ரஞ்சித் தெரிவித்த இந்த கருத்தின் காரம் குறைவதற்குள்ளாகவே - பட்டியல் இன மக்கள் ஓரணியில் திரண்டால் மகிழ்ச்சியே என ரஞ்சித் பாணியிலேயே அவருக்கு ஜான் பாண்டியன் பதிலளித்துள்ளார். ஒருவேளை, திராவிட கட்சிகள், பட்டியல் இன கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தலில் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் ஓரணியில் திரள வாசலைத் திறந்துவிட்டுள்ளார் ரஞ்சித். திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தமிழக அரசியலில் தொடரும் சூழலில், இந்த பரிட்சார்த்த முயற்சி எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

source: ns7,tv