செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமமுகவை, அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை....!" மதுரை ஆதினம் கூறிய தகவலுக்கு டிடிவி எச்சரிக்கை April 02, 2019

source ns7.tv
Image
அமமுகவை, அதிமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மதுரை ஆதினம் பொய் தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது 75வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கானப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெறுவதாகக் கூறினார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அமமுகவால், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மதுரை ஆதீனம் குறிப்பிட்டார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவும், அமமுகவும் இணைய வாய்ப்பு உள்ளதாக, அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சில வாரங்களுக்கு முன் மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.  ஆனால், மீண்டும் அதே கருத்தை மதுரை ஆதினம் தெரிவித்துள்ளதால் யாருக்கோ ஏஜெண்டாக செயல்பட்டு வருவது போல் உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதீனம்  சொல்வதுபோல் இணைப்புப் பேச்சு நடப்பது உண்மையானால், அதைச் செய்வது யார் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே? என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு, சுயலாபத்துக்காக கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் கண்டிக்க முடியாமல்,  இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால் மதுரை ஆதினம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.