ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் கட்டுக்கட்டாக சிக்கும் பணம்...! April 07, 2019

source ns7.tv
Image
சென்னை திருநின்றவூர் அருகே, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற, 1 கோடியே 77 லட்சம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு  நிரப்புவதற்காக, கொண்டு சென்ற பணம் என ஊழியர்கள் தெரிவித்த போதிலும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரி செல்லபாண்டியன் அவற்றை பறிமுதல் செய்தார். தொடர்ந்து பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி முன்னிலையில், பணத்திற்கு சீல் வைத்து, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்த பணத்திற்கான உரிய ஆவணங்களை, ஊழியர்கள் அளித்த பிறகு, அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும், எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
கோவை மாவட்டம் சூலூர் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சூலூர் அடுத்த காரணம்பேட்டை பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக, பணம் கொண்டு சென்ற வேனை மடக்கி, அதிகாரிகள் சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி, அந்த வேனில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம் எடுத்து செல்லப்பட்டதை அறிந்து, அதனை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 
சென்னை எண்ணூரில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்த  வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 11 லட்சம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  
கிருஷ்ணகிரி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து செல்லப்பட்ட 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கங்கலேரி கூட் ரோடு அருகே பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த தொகையை எடுத்து வந்ததாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.