சனி, 28 செப்டம்பர், 2019

இந்தியாவில் சுமார் 22 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு...! பலனளிக்குமா புதிய திட்டம்?


Image
2018ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 21.5 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் 17 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிக காசநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பிரதான இடத்தில் இருக்கிறது. உலகளவில் காசநோயால் பாதிக்கப்படும் 4பேரில் ஒருவர் இந்தியர் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் இந்த புள்ளிவிபரங்கள் ஒருபுறம் இருக்க இந்தியாவில் ஏற்படும் காசநோய் பாதிப்புகள் பற்றிய இந்திய காசநோய் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில்மட்டும் இந்தியா முழுக்க 21.5 லட்சம்பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது தெரிவந்துள்ளது. 2017ம் ஆண்டில் 18 லட்சமாக இருந்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 21.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்தியாவில் காசநோய் பாதிப்புகள் சுமார் 17 சதவீதம் அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதாவது 2025ம் ஆண்டிற்குள்ளாகவே இந்தியாவில் காசநோய் பாதிப்புகளை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதற்காகவே புதிய செயல் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்புக்கான தேசிய வழிமுறை திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காசநோயை கண்டறிவதிலேயே பல சிக்கல்களை இந்தியா கொண்டிருந்தது. தற்போது அந்த சிக்கல்கள் களையப்பட்டு காசநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு பதிவுசெய்ய மத்திய அரசு எடுத்துவரும் தொடர் முயற்சிகள் மூலமாக காசநோயை கண்டறிவதில் அரசின் இலக்கு எட்டப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார். தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், 14.4 கோடி பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக கூடுதலாக 49,733 காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார். நோய் கண்டறியப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வெகுஎளிதில் அவர்களை குணப்படுத்தும் முயற்சியில் இனி அரசு ஈடுபடும் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் ஹர்ஷவர்தன்.

அதற்காகவே கடந்த ஆண்டில் காசநோயாளிகளுக்காகவே, சிகிச்சை மையங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டு வருகிறது.மேலும், காசநோய் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டறியும் ஆய்வுகளிம் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமரின் காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்காகவே, TB Harega Desh Jeetega" என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

உலகின் மிகக்கொடும் உயிக்கொல்லி நோயான காசநோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகள், தற்போது பலனளிக்கத் தொடங்கியிருந்தாலும், 2025க்குள் காசநோயைக் முழுவதுமாகக் கட்டுப்படுத்த அரசு இன்னும் எவ்வளவு தீவிரமாக செயல்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...
credit ns7.tv