சனி, 14 செப்டம்பர், 2019

இந்தியாவா?; இந்தி-யாவா? - மு.க.ஸ்டாலின்

Image
இந்தி மொழியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி தொண்டர்களுக்கு இந்தியாவா? இந்தி-யாவா என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், எப்படியாவது இந்தி மொழியை திணித்துவிட முடியாதா என்று மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பலவித முயற்சிகளை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
துறைதோறும் தமிழ் மொழியை செழிக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணாவின் விருப்பம் என குறிப்பிட்ட அவர், அதற்காகவே இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தியதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அவரைத் தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்திட வழிவகை செய்தார் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற செய்ய வேண்டும் என திமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்றளவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் அலைக்கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க திமுக தொடர்ந்து போராடும் என குறிப்பிட்டார். எனவே, அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ் மொழியை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv