புதன், 11 செப்டம்பர், 2019

குஜராத்தில் குறைகிறது போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை!

credit ns7.tv
Image
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை, குஜராத் அரசு வெகுவாகக் குறைத்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 
25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அபராதத் தொகையை குறைத்துள்ள குஜராத் அரசு, இது வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மக்களிடம் இருந்து அதிக அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல என்று தெரிவித்துள்ள குஜராத் அரசு, இவ்விஷயத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டே அபராதத் தொகையை குறைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு மத்திய அரசு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதனை குஜராத் அரசு 500 ரூபாயாகக் குறைத்துள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்பவர்களுக்கான அபராதம் 10,000 ரூபாய் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை 1000 ரூபாயாக மாநில அரசு குறைத்துள்ளது. இதேபோல், இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால் 1000 ரூபாய் அபராதமாக மத்திய அரசு விதித்துள்ள நிலையில், அதனை குஜராத் அரசு 100 ரூபாயாகக் குறைத்துள்ளது. 
காற்று மாசு கட்டுப்பாடுக்கான சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான மத்திய அரசின் அபராதத் தொகை 10,000 ரூபாயாக உள்ள நிலையில், குஜராத் அரசு இதனை 3000 ரூபாயாகக் குறைத்துள்ளது.  
அதேநேரத்தில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, உரிய வயது வராத நிலையில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது ஆகியவற்றுக்கான அபராதத் தொகையை மாநில அரசுகள் மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.