புதன், 18 செப்டம்பர், 2019

அயோத்தி வழக்கு: ஒரு மாதத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய அறிவுறுத்தல்!

Image
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள், அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அக்டோபர் 18ம் தேதிக்குள் ஆவணங்கள் தாக்கல் செய்வதை முடித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 
இதனிடையே, உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் அதேநேரத்தில், மத்தியஸ்த முயற்சியும் நடைபெற அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை மத்தியஸ்த முயற்சி மூலம் தீர்வு ஏற்படுமானால், அது குறித்த அறிக்கையை மத்தியஸ்த குழு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம், வரும் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், அதற்குள்ளாக தீர்ப்பினை அளிக்கும் நோக்கில், இத்தகைய அறிவுறுத்தல்களை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

credit ns7.tv